உளவுத் துறை தவறாகப் பயன்படுத்தப்படுவதே பயங்கரவாதம் அதிகரிக்கக் காரணம்: சுவாமி சுவரூபானந்த சரஸ்வதி!

திங்கள், 3 நவம்பர் 2008 (12:22 IST)
அரசியல் நோக்கங்களுக்காக உளவுத் துறை தவறாகப் பயன்படுத்தப்படுவதனால்தான் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு காரணம் என்று துவாரகா பீட சங்கராச்சாரியார் சுவாமி சுவரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சங்கராச்சாரியார், “உளவு அமைப்புகள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன, எதிர்க்கட்சிகள், அரசியல் எதிரிகள் ஆகியோரை உளவு பார்க்க இவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான், பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான முன் தகவல்களைத் திரட்டுவதில் இவ்வளவு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

அது மட்டுமின்றி, பல்வேறு உளவு அமைப்புகளுக்கிடையேயும் தகவல் பரிமாற்றம் இல்லை என்பதையும் இத்தாக்குதல்கள் நிரூபிக்கின்றன என்று சங்கராச்சாரியார் குற்றம்சாற்றினார்.

பயங்கரவாதத்தை எந்த ஒரு மதத்துடனும் இணைத்து பேசுவது தவறானது என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எந்த மதத்திலும் இடமில்லை என்றும் கூறியவர், பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையன என்று கூறி இந்துமத அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சியையும் கண்டித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்