சமீபத்தில் மும்பையில் ரயில்வே வேலைவாய்ப்பு தேர்வு எழுத வந்த வட மாநிலத்தவர் மீதான தாக்குதல் வழக்கில் ராஜ்தாக்ரே கைதாகி பிணையில் விடுதலையானபோது, அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை அகற்றப்பட்ட நிலையில் இன்று தான் முதன்முதலாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மும்பை பாந்திராவில் உள்ள மிக் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் மக்கள் கொண்டாடும் சத்பூஜையை நான் ஒருபோதும் எதிர்த்தது இல்லை என்றும் ஆனால் அதனோடு இணைந்த அரசியல் நடவடிக்கைகளை எதிர்க்கிறேன் என்றார்.
''எனது வேதனை எல்லாம், பண்டிகையின் பெயரால் இங்கே அரசியல் லாபம் சம்பாதிக்கவும், ஓட்டு வங்கியை ஏற்படுத்தவும் முயற்சிக்கிற அரசியல் தலைவர்கள் மீது தான் என்று தெரிவித்த ராஜ்தாக்ரே, எனது வீட்டுக்கு அருகில் உள்ள சிவாஜி பூங்காவில் வங்காள மக்கள் துர்க்கா பூஜை நடத்துகிறார்கள். அங்கு ராம்லீலாவும் நடத்தப்படுகிறது. அவற்றுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது. உண்மையைச் சொல்வதானால் நான் அவற்றில் பங்கேற்றும் உள்ளேன் என்றார்.
எனவே இங்கு வசிக்கிற பீகார் மக்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி சத்பூஜையின்போது மதச்சடங்குகளை செய்யலாம் என்றும் எனது கட்சி அதை ஒரு போதும் எதிர்க்காது என்றும் ராஜ்தாக்ரே கூறினார்.
துப்பாக்கி முனையில் பேருந்தை கடத்த முயன்ற சம்பவத்தின்போது காவல்துறையினர் ராகுல்ராஜை சுட்டுக்கொன்றது சரியானதுதான் என்று கூறிய ராஜ்தாக்ரே, அப்போது அவர் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அதேநேரம் அவர், பயணிகளை சுட்டிருந்தால் காவல்துறையினர் மீது தான் குற்றச்சாட்டு எழும் என்று தெரிவித்தார்.
பட்லாப்பூர் ரயில் சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தரம்தேவ் ராய் கொல்லப்பட்டதில் எங்கள் கட்சிக்கு தொடர்பு இல்லை என்று மறுத்த ராஜ் தாக்ரே, இந்த சம்பவத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று ரயில்வே காவல்துறையும் கூறி விட்டனர் என்றார்.