கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 5 காவலர்கள் பணி நீக்கம்!
வெள்ளி, 31 அக்டோபர் 2008 (19:00 IST)
கந்தாமல்லில் நடந்த கலவரங்களில் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் இணைந்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 5 காவலர்களைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து ஒரிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரிசாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் லட்சுமானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டத்தில் நடந்த கலவரங்களில் கந்தாமல் மாவட்டத்தில் கிறித்தவ வழிபாட்டுக் கூடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார்.
நமது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யத் தவறிய குற்றத்தின் பேரில் பலிகுடா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி கே.என்.ராவ் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கந்தாமல் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண குமார், காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரபின் குமார் ஆகியோர் தாக்கல் செய்த கூட்டறிக்கையின் அடிப்படையில், மேலும் 5 காவலர்கள் ஒழுங்கீனம், பணியில் கவனக்குறைவு ஆகிய குற்றங்களைச் செய்ததற்காக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டி.கே.மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உதவி சார்பு ஆய்வாளர் ரசானந்தா மாலிக், ஹவில்தார் மேஜர் கே.என்.மொஹபாட்ரா, ஹவில்தார்கள் எஸ்.கே.ஹமீம், ஜெ.எஸ்.கான், பி.கே.மொஹந்தி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் ஆவர்.
மக்களின் மத்தியில் அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் கூறின.