இலக்கை நோக்கி சந்திரயான் - விஞ்ஞானி பேட்டி!

புதன், 29 அக்டோபர் 2008 (17:04 IST)
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து கடந்த 22ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தப்பட்ட உள்நாட்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சந்திரயான் விண்கலம் 2 லட்சத்து 67 ஆயிரம் கி.மீ. தூரத்தை எட்டியுள்ளது.

இதுபற்றி பெங்களூருவில், விண்கலத்தை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், தாங்கள் எதிர்பார்த்தது போல் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும், நவம்பர் 3ஆம் தேதியன்று கடைசி கட்டமாக இந்த விண்கலத்தை 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

அதன் பின்னர் சந்திரயான் விண்கலம், நிலவுக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக வரும் 14 அல்லது 15ஆம் தேதியன்று நிலவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திரயானை நிலவை நோக்கி உந்தித் தள்ளும் நியூட்டன் திரவ உந்து இயந்திரத்தில் போதுமான எரிபொருள் உள்ளதாகவும், இதனால் திட்டமிட்டபடி மிகச் சரியான நேரத்தில் இலக்கினை எட்டி வருவதாகவும் அண்ணாதுரை கூறினார்.

நிலவிற்கு அருகில் சந்திரயானை நிலைநிறுத்த சுமார் 100 கிலோ எரிபொருள் செலவிடப்படும் என்றும், மீதமுள்ள எரிபொருள் 2 ஆண்டுகள் வரை சந்திரயான் நிலவின் சுற்று வட்டப்பாதையில் செல்வதற்கு செலவிடப்படும் என்றும் அவர் விவரித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்