பீகார் வாலிபர் சுட்டுக்கொலை: உயர்மட்டக் குழு விசாரணை!
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (18:13 IST)
மும்பையில் `பெஸ்ட்' பேருந்தில் பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் ஜானி ஜோசப் தலைமையில் உயர் நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் மும்பையில் இளைஞர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை இயக்குனர் மற்றும் மும்பை காவல் ஆணையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆயுதத்துடன் வந்த இளைஞர் எப்படி பேருந்துக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் முதல்வர் கூறினார்.
பாட்னாவைச் சேர்ந்த ராகுல்ராஜ் என்ற வாலிபர் நாட்டுத் துப்பாக்கியுடன் மாடி பேருந்தின் மேல் பகுதியில் ஏறி குர்லா என்ற இடத்தில் 12 பயணிகளுடன் கடத்த முயன்ற போது, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே-வைக் கொல்ல தாம் மும்பை வந்ததாகவும் அவர் கூறியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொன்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ஆகியோர் ராகுல்ராஜ் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.