வட மாநிலத்தவர் மீது தாக்குதல்: பிரதமரை சந்திக்கிறார் நிதிஷ்!
செவ்வாய், 28 அக்டோபர் 2008 (13:14 IST)
மகாராஷ்டிராவில் வட மாநிலத்தவருக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.
மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர், வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் மும்பையில் ரயில்வே தேர்வு எழுத சென்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக பீகார் மாநில மாணவர்களும், ராஜ் தாக்கரேவுக்கு எதிராக தங்களது மாநிலத்தில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அம்மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவுள்ளனர்.
அப்போது, பீகாரில் வடமாநிலத்தவருக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கூட்டறிக்கை ஒன்றை பிரதமரிடம் அளிக்கவுள்ளனர். மண்ணின் மைந்தன் கோஷத்தை எழுப்பி, வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்திவரும் ராஜ் தாக்கரே மற்றும் அவரது கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தவுள்ளனர்.
இந்த அனைத்துக் கட்சிக் குழுவில் பீகார் மாநில மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர்.