சிறிலங்காவிற்கு இராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: இ.கம்யூனிஸ்ட்!

சனி, 25 அக்டோபர் 2008 (18:10 IST)
தமிழர்கள் மீது இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுவரும் சிறிலங்க அரசிற்கு செய்துவரும் நேர்முக, மறைமுக இராணுவ உதவிகளை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அகில இந்தியச் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி. இராசா, சிறிலங்காவிற்குச் செய்யும் இராணுவ உதவிகள் எதுவாயினும் அது அங்கு தமிழ் மக்களை கொல்வதற்கே பயன்படுத்தப்படும் என்றும், அப்படிச் செய்வது அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இனப்படுகொலைக்கு உதவுவதாகவே ஆகும் என்று கூறினார்.

தமிழ்நாட்டு மீனவர்களின் மீ்ன்பிடி உரிமையை பறிக்கும் கச்சத்தீவு ஒப்பந்தம், இலங்கை இனப்பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசு தெளிவான நிலையை எடுக்கத் தவறிவிட்டது என்று குற்றம்சாற்றினார்.

இலங்கையில் போரை நிறுத்துவிட்டு, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பேச்சுவார்த்தையைத் துவக்குமாறு சிறிலங்க அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இராசா கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்