காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் இருதரப்பு வர்த்தகம் துவங்கியது!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (20:26 IST)
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையத் தொடர்ந்து இருவேறு பகுதிகளாக துண்டிக்கப்பட்ட காஷ்மீருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிக்கும் இடையிலான வர்த்தகம் இன்று துவங்கியது.

பிரிவினையைத் தொடர்ந்து 60 ஆண்டுக்காலமாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவந்த பகைமையால் ஜீலம் பள்ளத்தாக்கு சாலை மூடப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு இருபுறத்திலும் வாழ்ந்த காஷ்மீர் மக்களுக்கு இடையிலான தொடர்புகளும், வணிக உறவுகளும் துண்டிக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு ஊரி நகரில் இருந்து பழங்கள், உலர்ந்த பழங்கள், மசாலா பொருட்கள், காஷ்மீரத்து கலைப் பொருட்கள். பருப்பு வகைகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாராக இருந்த 13 சரக்கு வாகனங்களை கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என். ஓரா.

ஊரியி்ல் இருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு வாகனங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டில் காஷ்மீரின் இரு பகுதிகளையும் இணைக்கும் அம்மான் சேதுப் பாலத்தைக் கடந்து சென்று மறுபகுதியில் உள்ள சக்கோடி என்று இடத்தில் சரக்குகளை இறக்கி வைத்தன.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில் இருந்து இரண்டு சரக்கு வாகனங்கள் அரிசி, பருப்புகள், தோல் பொருட்கள் ஆகியவற்றுடன் பாலத்தைக் கடந்து வந்து ஊரிக்கு வந்து சேர்ந்தன.

சரக்குகளை இறக்கப்பட்டப் பின்னர் இரு வாகனங்களும் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து சென்றுவிடும். அதேபோல, ஊரியில் இருந்து சென்ற 13 வாகனங்களும் சக்கோடியில் இருந்து காஷ்மீருக்குத் திரும்பிவிடும்.

இங்கிருந்து நமது வாகனங்கள் அப்பகுதிக்கு சென்றபோதும், அப்பகுதியில் இருந்து சரக்கு வாகனங்கள் காஷ்மீருக்குள் வந்த சேர்ந்தபோதும் ஏராளமான மக்கள் உற்சாகமாக அவைகளை வரவேற்றனர்.

கட்டுப்பாட்டுக் கோட்டில் வணிகம் துவக்கப்பட்டதையடுத்து, 60 ஆண்டுகளுக்குப் பிறகு ராவல்பிண்டி- முசாஃபராபாத்- ஸ்ரீநகர் சரக்குப் போக்குவரத்தும், வணிகமும் மீண்டும் துவங்கியுள்ளன.

இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு, அதன் பிறகு அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டப் பிறகு, காஷ்மீரின் இருபகுதிகளுக்கு இடையே பேருந்து போக்குவரத்து துவக்குவதற்கு அன்றையப் பிரதமர் வாஜ்பாய் 2003ஆம் ஆண்டு அனுமதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி காஷ்மீரின் இரு பகுதிகளுக்கு இடையே பேருந்துப் போக்குவரத்துத் துவங்கியது. காங்கிரஸ் தலைவர் சோனியா முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் பேருந்துப் போக்குவரத்தைத் துவக்கி வைத்தார். இதற்கு தீவிரவாதிகளிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல் இருந்தது. அதையும் மீறி பேருந்து போக்குவரத்து துவங்கியது.

அதனைத்தொடர்ந்து, இன்று காஷ்மீரின் இருபகுதிகளுக்கும் இடையே வர்த்தகம் துவங்கியிருப்பது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதி முயற்சியின் ஒரு அங்கமான நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கையின் அடுத்த கட்ட முன்னேற்றமாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்