இலங்கைப் பிரச்சனை: நாடாளுமன்றம் தள்ளிவைப்பு!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (12:40 IST)
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல், இந்தியா-அமெரிக்கா அணசக்தி ஒ‌த்துழை‌ப்பு ஒப்பந்தம், மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல் போன்ற பிரச்சனைகளால் நாடாளுமன்ற இரு அவைகளும் நண்பகல்வரை தள்ளிவைக்கப்பட்டன.

மக்களவை இன்று காலை கூடியதும், இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வரும் பிரச்சினையை திமுக உறுப்பினர்கள் எழுப்பினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்களும் வேறு வேறு பிரச்சினைகளை எழுப்பி கூச்சலிட்டனர்.

கேள்வி நேரத்தை ஒத்திவைக்குமாறு கோரி 5 தாக்கீதுகள் வரப்பெற்றிருப்பதால், அனைத்து உறுப்பினர்களும் ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து பேச ஒத்துழைக்குமாறு மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி கேட்டுக் கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள் இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதல் பிரச்சினையை எழுப்பினார்கள். இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள், அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நாட்டை மத்திய அரசு அடகு வைத்து விட்டதாகக் கூறி கூச்சலிட்டனர்.

மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் மீதான தாக்குதல் பிரச்சினையை ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் எழுப்பினார். இதற்கு பாஜக உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து அவையை நடத்த முடியாத நிலை உருவானதால், மாநிலங்களவையும் நண்பகல்வரை ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்