அணு சக்தி வணிகம்: இந்தியா-ரஷ்யா பேச்சு!

செவ்வாய், 21 அக்டோபர் 2008 (02:01 IST)
அணு உலைகள் கட்டுவது உட்பட அணு சக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த பல்வேறு விஷயங்களை ரஷ்யாவுடன், இந்தியா விவாதித்துள்ளது.

PTI PhotoFILE
புதுடெல்லிக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ரஷ்ய அயலுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அணு சக்தித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.

சுமார் 90 நிமிடம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அணு சக்தித் துறையில் எதிர்கால வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்து இருவரும் விவாதித்தாகக் கூறினார்.

வரும் டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முதன்முறையாக இந்தியாவுக்கு வரும் போது, இந்த சந்திப்பின் போது நடத்தப்பட்ட விவாதம் தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே கையெழுத்தாக உள்ளது.

கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட உள்ள 4 அணு உலைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதா என்று பிரணாப் முகர்ஜி விரிவாக கூறவில்லை என்றாலும், அது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடங்குளத்தில் அணு உலை நிறுவ இரு நாடுகளிடையே கடந்த ஜனவரி 2007இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐ.ஏ.ஈ.ஏ) அனுமதியை இந்தியா பெறாத காரணத்தால் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருந்து வந்தது.

இதற்கிடையில், சமீபத்தில் சர்வதேச நாடுகளுடன் அணுசக்தி வணிகத்தில் இந்தியா ஈடுபட ஐ.ஏ.ஈ.ஏ அனுமதி வழங்கியுள்ளதால் இரு நாடுகளும் அணுசக்தி வணிகம் குறித்து விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.