கைது உத்தரவுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி ராஜ்தாக்கரே மனு!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (03:53 IST)
பீகார் மக்களை அவமானப்படுத்தும் விதமாக கருத்துகளைத் தெரிவித்த காரணத்திற்காக ஜாம்ஷெட்பூர் நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் ராஜ்தாக்கரே மனு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவரான ராஜ்தாக்கரே, கடந்த சில மாதங்களுக்கு முன் அம்மாநிலத்தில் வசிக்கும் பீகார் மக்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பீகார் மக்களின் மனதை புண்படுத்துவிதமான கருத்துகளை தெரிவித்த காரணத்திற்காக ராஜ்தாக்கரேவை கைது செய்ய கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ஜாம்ஷெட்பூர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.திவாரி உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவு காரணமாக தாம் கைது செய்யப்படலாம் எனக் கருதிய ராஜ்தாக்கரே ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிபதி ஏ.கே.திவாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்தாக்கரேயின் வழக்கறிஞர் அபிலேஷ் சௌவ்பே, ராஜ்தாக்கரே தாக்கல் செய்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். எனினும் அதுவரை அவரை கைது செய்யக் கூடாது என்று எந்தவித உத்தரவையும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.