ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் மீண்டும் பணியில்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (00:03 IST)
பணி நீக்கம் செய்யப்பட்ட 1,900 ஊழியர்களையும் மீண்டும் பணியில் எடுத்துக் கொள்வதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் அறிவித்துள்ளார்.

"அனைத்து ஊழியர்களும் நாளை முதல் பணிக்கு திரும்பலாம்" என்று நரேஷ் கோயல் வியாழன் இரவு அறிவித்துள்ளார்.

"நான் இரண்டு நாட்கள் ஊரில் இல்லை, இன்றுதான் திரும்பினேன், எங்களது இளம் ஊழியர்கள் கண்ணீர் விடும் காட்சிகளைக் கண்டு வருந்தினேன், முதல் நாளில் இருந்தே நான் ஊழியர்களை எனது குடும்ப அங்கத்தினர்களாகவே கருதி வருகிறேன். இதனால் நீக்கப்பட்ட அனைத்து பணியாளர்களும் மீண்டும் பணிக்கு திரும்பலாம்" என்று அவர் மேலும் கூறுகையில் தெரிவித்தார்.

இந்த முடிவுக்கு தான் வந்தது எந்த வித நெருக்கடியினாலும் அல்ல என்று கூறிய கோயல் நிம்மதியான மனசாட்சியுடன் தான் இப்போது உறங்க முடியும் என்றார்.

செலவுகளை குறைக்கும் நடவடிக்கை தொடரும், ஆனால் நிறுவனத்திற்காக பணியாற்றும் ஊழியர்களை நீக்கி அதனைச் செய்ய மனம் வரவில்லை என்று கூறினார் கோயல்.

வெப்துனியாவைப் படிக்கவும்