1900 ஊழியர்கள் நீக்கம்! ஜெட் ஏர்வேஸ் அதிரடி!

வியாழன், 16 அக்டோபர் 2008 (00:42 IST)
மும்பை: இந்திய விமானப் போக்குவரத்தில் முன்னணி வகிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செலவுகளை குறைக்கும் நோக்கத்திற்காக 1900 பணியாளர்களை அதிரடி பணி நீக்கம் செய்துள்ளது.

"இது துரதிர்ஷ்டமான முடிவுதான், இதற்காக நிறுவனந்தில் உள்ள அனைவரும் வருந்துகிறோம், ஆனால் இது நிறுவனத்தையும் அதில் பணியாற்றும் மீதமுள்ள பணியாளர்களையும் காக்கும் ஒரு நடவடிக்கையாகும்" என்று ஜெட் ஏர்வேஸ் தலைமை இயக்குனர் சரோஜ் தத்தா கூறியுள்ளார்.

செவ்வாயன்று 800 ஊழியர்கள் நீக்கப்பட்டனர், புதனன்று மேலும் 1100 ஊழியர்களுக்கு பணி நீக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி நீக்கங்கள் தொடரும் என்று தெரிகிறது.

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் விமான போக்குவரத்து நிறுவனத்துடன் ஜெட் ஏர்வேஸ் மேற்கொண்ட கூட்டுறவு ஒப்பந்தங்களினால்தான் இந்த அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கைகள் செய்யப்படுகிறது என்பதை சரோஜ் தத்தா மறுத்துள்ளார்.

அதேபோல் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் 300 பேரை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. மேலும் வரும் நாட்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிகிறது. நிறுவனத்தின் பெருகும் செலவுகளை குறைக்க எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்போம் என்று விஜய் மல்லையா ஏற்கனவே சூசகமாக தெரிவித்துள்ளார்.

வெளியேற்றப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக ஜெட் ஏர்வேஸ் கூறியுள்ளது. அதாவது விமானப் போக்குவரத்துத் துறையில் வர்த்தகச் சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை அவசியமானது என்றும் நிலமை சீரடைந்தால் நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவோம் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.

விமானிகள் முதல் நிர்வாகத்துறை ஊழிர்யகள் வரை இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் பணிப்பயிற்சி காலத்தில் இருக்கும் ஊழியர்களே நீக்கப்பட்டுள்ளனர் என்று தெளிவு படுத்திய ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், போக்குவரத்து விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதால் இந்த ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்