இலங்கை நிலவரம் கவலையளிக்கிறது-மன்மோகன்

புதன், 15 அக்டோபர் 2008 (22:27 IST)
சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்கள் மீதான அடக்கு முறையை இலங்கை அரசு கைவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இலங்கை நிலவரம் கவலையளிப்பதாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

இலங்கை அரசு சமாதான பேச்சு வார்த்தையை துவக்க வேண்டுமே தவிர ராணுவ வெற்றியை பிரதானமாகக் கொள்ளக்கூடாது என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்பதை அழுத்திக் கூறிய மன்மோகன் சிங் இந்தியாவின் இந்த கருத்தை இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா-தென்ஆப்பிரிக்கா-பிரேசில் உச்சி மாநாட்டிற்கிடையே செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மன்மோகன் சிங், " இலங்கையில் உள்ள நிலவரங்கள் இந்தியாவிற்கு பெரும் கவலையளிப்பதாக உள்ளது, அதிகரிக்கும் பகைமைகள் குறித்தும், அப்பாவி மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்தும், வீடு வாசலை இழந்து புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் இந்தியா கவலையடைந்துள்ளது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ராணுவ வெற்றி இதற்கு தீர்வாகாது என்றும், சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் ஏற்படும் அரசியல் தீர்வே சாத்தியம் என்றும், சிறுபான்மையினரின் குறிப்பாக தமிழர்களின் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மீனவர்கள் கொல்லப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நிறுத்தப்படவேண்டும் என்று கூறினார் மன்மோகன் சிங்.

இதற்கிடையே தமிழக கட்சிகளின் அக்கறைகளை இலங்கை அரசிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்