அஸ்ஸாமில் பேருந்து விபத்து: 6 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (14:07 IST)
அஸ்ஸாமின் துப்ரி மாவட்டத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த உருளைக் கிழங்கு ஏற்றிச் சென்ற சரக்கு லாரியின் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 6 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கவுஹாத்தியில் இருந்து 320 கி.மீ. மேற்கே உள்ள பெல்டோலி கிராமத்திற்கு அருகே இன்று அதிகாலை ஒரு மணியளவில் நடந்த இவ்விபத்தில் மேலும் 40 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்து‌ள்ளன‌ர்.

தேசிய நெடுஞ்சாலை 31இல் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளான போது அதில் 67 பயணிகள் இருந்ததாகவும், அதிவேகமாகச் சென்றதால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே செல்ல வேண்டிய பேருந்தில், 67 பயணிகளை ஏற்றிச் சென்றதாலும், அதிவேகமாக சென்றதாலும் விபத்து நிகழ்ந்ததாக துப்ரி காவல்துறை தலைவர் மஹன்தா செய்தியாளர்களிடம் கூறினார்.

காயமடைந்த 40 பயணிகளில் 10 பே‌‌ர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்