ஒரிசாவிலும், கர்நாடகத்திலும் நடைபெற்ற மத வன்முறைகள் அபாயகரமானவை என்று வர்ணித்த பிரதமர் மன்மோகன் சிங், இது போன்ற வன்முறைகள் நம் அடிப்படை பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் கூறினார்.
மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைப்பவர்கள் "அச்சப்படும் வகையிலான தண்டனை"க்கு தகுதியானவர்களே என்று சாடினார்.
மேலும் வெறுப்புணர்வும், வன்முறை உணர்வும் செயற்கையாக தூண்டிவிடப்படுகின்றன என்றார் அவர். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை, மக்களிடையே அச்சத்தை போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளின் தேவையை வலியுறுத்தினார் மன்மோகன் சிங்.
நாட்டின் கூட்டுப்பண்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற மத ரீதியான வன்முறைகள் ஆபத்தானவை என்று வர்ணித்த மன்மோகன் சிங் இன்று நம் மதப்பிரிவினரிடையே பிளவுகள் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது என்று கூறினார்.
நாள் முழுதும் நடைபெற்ற இந்த தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய மற்றும் மாநில அமைச்சர்களும் முதல்வர்களும் கலந்து கொண்டனர்.