ஒரிசா, கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் கலவரம், வன்முறை சம்பவங்களின் போக்கு மிகவும் அபாயகரமாது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், சமூக நல்லிணக்கம், ஒருமைப்பாடு மற்றும் அமைதியைக் குலைப்பவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என எச்சரித்துள்ளார்.
டெல்லியில் இன்று துவங்கிய தேசிய ஒருமைப்பாட்டு கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய போது இதனைத் தெரிவித்த பிரதமர், அம்மாநிலங்களில் வெறுப்புணர்வையும், கலவரத்தையும் தூண்டும் சூழல் செயற்கையாக உருவாக்கப்படுவதாக கூறினார்.
கலவரம், வன்முறையை வேண்டுமென்றே தூண்டும் வகையில் சில சக்திகள் அங்கு செயல்பட்டு வருவதாகவும், அவற்றை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
பல்வேறு சமுதாயத்தினர் இடையே இன்று பிரிவினைக் கோடு விழுந்துள்ளது. ஒரு பிரிவினர சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சமூகக் கலகங்களை கையாழுவதில் இருவேறு கருத்துகள் கூடாது எனக் கூறிய பிரதமர், அதுபோன்ற கலவரங்களை தூண்டும் சக்திகளை மாநில அரசுகள் முழு பலத்துடன் ஒடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இன்று முழுவதும் நடைபெறும் தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.