காஷ்மீரின் முதல் இரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர்!
சனி, 11 அக்டோபர் 2008 (14:23 IST)
காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் இரயிலைப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
1998 ஆம் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதன் மூலம் ஜம்மு- காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.
இன்று காலை நெளகாமில் உள்ள ஸ்ரீநகர் இரயில் நிலையத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரயிலைப் பிரதமர் மன்மோகன் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
உடன் ஐ.மு.கூ. தலைவர் சோனியா காந்தி, இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத், ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா ஆகியோர் இருந்தனர்.
1998 இல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது தொடங்கி வைக்கப்பட்ட இந்த இரயில் திட்டம் மெல்ல மெல்ல முழுமையடைந்து இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
பட்காமில் இருந்து அனன்டாங் வரையிலான இந்த இரயில் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.
இந்தப் பாதையில் பட்காம், ஸ்ரீநகர், பாம்போர், காகாபோரா, அவந்திபோரா, பஞ்காம், பிஜ்பெஹரா, ராஜ்வான்செர், அனன்டாங் ஆகிய இரயில் நிலையங்கள் உள்ளன.
முதல் கட்டமாக பட்காம் மாவட்டத்தில் உள்ள ராஜ்வான்செர்ரில் இருந்து அனன்டாங் வரை 66 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டும் இரயில் இயக்கப்படும் என்றும் இதற்குக் கட்டணம் ரூ.15 என்றும் இரயில்வே பேச்சாளர் தெரிவித்தார்.
அக்டோபர் 12 முதல் முழுமையாக இயங்கத் துவங்கவுள்ள இந்த இரயிலில் 8 பெட்டிகள் உள்ளன.