தனித் தெலுங்கானா கோரிக்கை: காங்கிரஸ் மீது சந்திரபாபு நாயுடு பாய்ச்சல்!
வியாழன், 9 அக்டோபர் 2008 (21:40 IST)
தனித் தெலுங்கானா விடயத்தில் காங்கிரஸ் அளித்த உறுதிமொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், இந்த விடயத்தை அரசியல் ஆதாயத்திற்காகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது என்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாற்றினார்.
தெலுங்கானா, ராயலசீமா உள்ளிட்ட தனி மாநிலங்கள் கோரிக்கையைத் துவங்கி வைத்த காங்கிரஸ் கட்சி, அதற்கான அரசியல் ஆதாயங்களைப் பெற்றதும், அந்தக் கோரிக்கைகளைக் கைவிட்டு விட்டது என்றார் அவர்.
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு மேலும் கூறியதாவது:
கடந்த 1968-69 ஆம் ஆண்டுகளில் தனித் தெலுங்கானா வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டது.
பின்னர் என்.டி.ராமாராவ் முதலமைச்சராக இருந்தபோது தனி ராயலசீமா மாநிலம் வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி போராட்டத்தைத் துவக்கியது. பின்னர் அந்தப் போராட்டத்தையும் கைவிட்டுவிட்டது.
இதையடுத்து 1999இல் எல்லா இடங்களிலும் தெலுங்கு தேசம் கட்சி வலுவான நிலையில் இருந்தபோது, தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்காகத் தனித் தெலுங்கானா கோரிக்கையை காங்கிரஸ் கட்சி மீண்டும் கையில் எடுத்தது.
பின்னர் 2004ல் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியுடன் கூட்டணி வைக்கையில் தனி மாநிலக் கோரிக்கையைக் கைவிடுவதாக காங்கிரஸ் உறுதியளித்தது.
அதற்கு முன்னர் 1999 இல் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா கோரிக்கையை ரகசியமாக ஆதரித்து வந்தார்.
இப்படி எல்லாத் தருணங்களிலும் தனது அரசியல் ஆதாயத்திற்காகவே தனி மாநிலங்கள் கோரிக்கையைப் பயன்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சி, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை வசதியாக மறந்து விடுகிறது.
தனித் தெலுங்கானா ஆகட்டும், தனி ராயலசீமா ஆகட்டும் தெலுங்கு தேசம் கட்சி மட்டும்தான் உறுதியாகப் போராடுகிறது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகப் பாடுபடுவது தெலுங்கு தேசம் மட்டுமே.
இவ்வாறு சந்திபாபு நாயுடு கூறினார்.