வன வளங்களை பாதுகா‌க்க ஒத்துழைப்பு அவசியம் : அமைச்சர் ரகுபதி!

திங்கள், 6 அக்டோபர் 2008 (18:32 IST)
வன விலங்குகள், தாவர வகைகள் போ‌ன்ற வன வளங்களை பாதுகாக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும், பங்கும் அவசியம் என்று மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ரகுபதி கூறியு‌ள்ள‌ா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் இன்று நடந்த வனவிலங்கு பாதுகாப்பு வார விழாவை தொடங்கி வைத்து பே‌சிய அவ‌ர், "பல்வேறு வகையான இயற்கை வளங்களை கொண்டிருப்பதிலும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் பாரம்பரியத்திலும் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகவும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும் உள்ளது.

நாட்டில் 45,000 தாவர வகைகளும் 81,000 விலங்கு வகைகளும் இருக்கின்றன. அரிதாகிவரும் புலி, யானை, காண்டாமிருகம் போன்ற விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன. இத்தகைய வன சக்திகளை பாதுகாப்பதை நம் பாரம்பரியத்தோடு இணைந்த பழக்கமாக கொண்டிருப்பது பெருமைக்குரியது.

தற்போது இருக்கும் வளங்களை அழிந்து விடாமல் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் இந்த வளங்களும் இதன் பயன்களும் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். மேலும் அதிக வன வளங்களைப் பெற்று, அழகான சூழலில் அவர்கள் வாழ அன்னை பூமியை நாம் பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் உறுதியேற்கவே வனவிலங்கு பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.

வன வளங்கள் நிலைத்திருக்க செய்வதிலும் இவற்றை பாதுகாப்பதிலும் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பங்கும், ஒத்துழைப்பும் அவசியம். நாட்டின் அரிய பொக்கிஷங்களான விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். அதற்கான பணியில் சிறிய அம்சமாக இருந்தாலும் முக்கிய அம்சமாகவே இந்த விழா கொண்டாடப்படுகிறது.

நாட்டின் வன வளங்களை பாதுகாக்கும் நோக்கில் ஒருங்கிணைந்த வனவிலங்கு பாதுகாப்பு திட்டம், தேசிய வனவிலங்கு செயல் திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. வனவிலங்குக‌ள், தாவர வகைகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் மாநில அரசுகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் நிதியுதவியும், தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன" எ‌ன்று ரகுபதி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்