25 கிரேன் வாங்க ரூ.5.88 கோடி அனுமதி : டி.ஆர் பாலு உத்தரவு!
திங்கள், 6 அக்டோபர் 2008 (18:13 IST)
தேசிய நெடுஞ்சாலை விபத்து நிவாரண சேவைத் திட்டத்தின் கீழ் 25 பாரம் தூக்கும் இயந்திரங்களை (கிரேன்கள்) வாங்க ரூ.5.88 கோடியை அனுமதித்து மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு இன்று உத்தரவிட்டுள்ளார். இதில் தமிழகத்துக்கு 5 கிரேன்கள் வழங்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை விபத்து நிவாரண சேவைத் திட்டம் கடந்த 2000-01ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து, காவல்துறைகளுக்கும், மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தன்னார்வ அமைப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் கிரேன்கள் வழங்கப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை விரைந்து சீர்படுத்தவும் இதன் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் 10 டன் எடையுள்ள 25 கிரேன்களை வாங்க ரூ.5.88 கோடியை அனுமதித்து அமைச்சர் டி.ஆர். பாலு உத்தரவிட்டுள்ளார்.
இந்த 25 கிரேன்களில் தமிழக போக்குவரத்துத்துறைக்கு 5 கிரேன்கள் வழங்கப்படுகிறது. கர்நாடக காவல்துறைக்கு 3ம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, ஒரிசா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்துக்கு தலா 2 கிரேன்களும், அந்தமான் நிக்கோபார் தீவுக்கு ஒரு கிரேனும் வழங்கப்படுகிறது.
2007-08ஆம் ஆண்டு வரை 437 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 252 கிரேன்களும் பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு இருக்கிறது.