ஹைட் சட்டத்தால் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம்: அத்வானி!
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (17:20 IST)
அமெரிக்காவுடன் நல்லுறவுகள் நீடிப்பதைப் பா.ஜ.க. விரும்புவதாகவும், ஹைட் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவிற்குள்ள அணு ஆயுதச் சோதனை நடத்தும் வாய்ப்புகள் மூடப்பட்டு விட்டதாலேயே அணு சக்தி ஒப்பந்தத்தைத் தாங்கள் அதிர்ப்பதாகவும் அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைசிடம் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள கோண்டலீசா ரைஸ் இன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானியைச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் குறித்து பா.ஜ.க. பேச்சாளர் பிரகாஷ் ஜவதேகர் கூறுகையில், "அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஹைட் சட்டத்துடன் பிணைக்கப்பட்ட பிறகு இந்தியாவிற்குள்ள அணு ஆயுதச் சோதனை நடத்தும் வாய்ப்புகள் மூடப்பட்டு விட்டன. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களை விட்டுக்கொடுத்து அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் என்று ரைசிடம் அத்வானி கூறினார்" என்றார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஹைட் சட்டம் கட்டுப்படுத்தாது என்று பா.ஜ.க.விற்கு மத்திய அரசு அளித்த உறுதிமொழி பொய் என்பது தற்போது தெளிவாகத் தெரிந்து விட்டது என்று அத்வானி குற்றம்சாற்றியதாகவும் ஜவதேகர் கூறினார்.
"மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் காற்றில் பறந்துள்ளன. 123 ஒப்பந்த வரைவைப் படித்த பிறகும், அமெரிக்க காங்கிரசிற்கும் செனட் சபைக்கும் அதிபர் புஷ் எழுதியுள்ள கடிதத்தின் மூலமும், 123 ஒப்பந்தம் அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்ற உண்மை வெளியாகிவிட்டது.
அதனால்தான் இந்த ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கிறது. அதே நேரத்தில் எதிர்காலத்தில் அமெரிக்காவின் நல்லுறவுகளும் பாதுகாப்பு உறவுகளும் நீடிக்க வேண்டும் என்று பா.ஜ.க விரும்புகிறது." என்று அத்வானி கூறியுள்ளார்.