ரைஸ் இந்தியா வருகை: அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகாது!
சனி, 4 அக்டோபர் 2008 (13:17 IST)
அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று காலை புதுடெல்லி வந்தடைந்தார். எனினும் அவரது இந்த பயணத்தின் போது இந்திய-அமெரிக்க 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகாது எனத் தெரிகிறது.
PTI Photo
FILE
இரு நாடுகளுக்கு இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை இன்று சந்தித்து ரைஸ் பேச்சு நடத்த உள்ளார்.
இன்று மதியம் 2 மணியளவில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திடும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க நிர்வாக நடைமுறைகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் ரைஸ் பயணத்தின் போது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அணு உலைகளுக்கான எரிபொருள் வழங்கல் தொடர்பான உறுதி, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துகள் குறித்த விளக்கத்தை பெற்ற பின்னரே இந்தியா அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் அனுமதி வழங்கிய இந்த அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த சட்ட வரைவில் அதிபர் புஷ் கையெழுத்திடவில்லை என்றாலும், இருநாடுகளும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்பதால், காண்டலீசா ரைஸின் இந்திய பயணத்தின் போதே அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட வேண்டும் என அமெரிக்க விரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜி உடனான சந்திப்பின் போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், வர்த்தக உறவுகள் குறித்து ரைஸ் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பயணத்தை முடித்துக் கொள்ளும் முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானியையும் ரைஸ் சந்திக்க உள்ளார்.