மங்களூரில் 4 தீவிரவாதிகள் பிடிபட்டனர்!
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (20:40 IST)
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக புலனாய்வு செய்து வரும் காவல்துறையினர் இன்று அதிகாலை கர்நாடக மாநிலம் மங்களூரில் 4 தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளனர்.
மும்பைக் காவல்துறையும் தென் கன்னட மாவட்டக் காவல்துறையும், நக்சலைட் ஒழிப்புப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் மங்களூர் உல்லால் பகுதியில் வசித்து வரும் வீட்டுமனை முகவர் முகமது அலி (வயது 56), அவருடைய மகன் ஜாவெத் அலி (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், ஜாவெத் அலி கொடுத்த தகவலையடுத்து நெளசாத் (வயது 25) கைது செய்யப்பட்டதாகவும், நெளசாத் அளித்த தகவலின் அடிப்படையில் அகமது பாவா (வயது 33) கைது செய்யப்பட்டதாகவும் கர்நாடகக் காவல்துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
முகமது அலியின் வீட்டில் ஜீகாதை வலியுறுத்தும் புத்தகங்களும், குறுந்தகடும், 2 செல்பேசிகளும் கைப்பற்றப்பட்டதாகவும், நெளசாத் தங்கியிருந்த இடத்தில் வெடிக்கும் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 குண்டுகளையும், 12 செல்பேசிகளையும், செல்பேசியில் பயன்படுத்தப்படும் பல சிம் கார்டுகளையும் கைப்பற்றியதாகவும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
நெளசாத்திடம் நடத்திய விசாரணையில் அகமது பாவாவின் கூட்டாளி முதாசர் (வயது24) என்பவரின் பூட்டிக்கிடந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு ஒரு மடிக் கணினியும் ரூ.11,39 லட்சம் ரொக்கமும், 5 செல்பேசிகளும், பல குறுந்தகடுகளும் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை செய்திக் குறிப்பு கூறுகிறது.
இவர்களின் கூட்டாளி அகமது என்கின்ற ரியாஸ் என்பவரைப் பிடிக்க பாத்கல் என்கின்ற இடத்தை நோக்கி ஒரு காவற்படை விரைந்துள்ளதாகவும், நமது நாட்டில் நடந்த பல்வேறு தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்களைப் பற்றிய புலனாய்வின் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.