இதுகுறித்து, ஹரியானா மாநிலம் பானிபட் நகரில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நடந்த பேரணியில் பேசிய அவர், "பயங்கரவாத தாக்குதல்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட சில கட்சிகள் முயற்சிக்கின்றன. அவைகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகச் சமூகத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன." என்று குற்றம்சாற்றினார்.
மதம், இனம் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் பிளவுபட்டால் நம்மை எதிர்நோக்கும் பெரிய சவால்களை நம்மால் சந்திக்க முடியாது. அதனால்தான் பயங்கரவாதிகள் நமது நாட்டை பிளவுபடுத்த விரும்புகின்றனர். அதேபோல பயங்கரவாதப் பிரச்சனையை அரசியலாக்கி லாபமடைய விரும்புகிறவர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என்ற அவர், அத்தகைய கட்சிகளின் பிரச்சாரங்களை மக்கள் நம்பக் கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், "பயங்கரவாதிகள் இந்த நாட்டின் எதிரிகள். பயங்கரவாதம் என்பது தேசியப் பிரச்சனை. பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் வெற்றிபெறாது. ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்து சுதந்திரத்தைப் பெற்றனர். ஆனால் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களைக் கொன்று வருகின்றனர். பொது மக்களுக்கு அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் போராட வேண்டும்.
சமூக ஒற்றுமையும் சகோதரத்துவமும் சீர்குலைய வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணம் நிறைவேறாது. அவர்கள் ஒடுக்கப்படுவார்கள். பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட வேண்டும். அதற்கான உறுதியான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது" என்றார் சோனியா.