தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த தபால்தலைகள் 150 நாடுகளில் புழக்கத்தில் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விடயம், இந்தியாவின் விடுதலைக்காக அவர் எதிர்த்துப் போராடிய இங்கிலாந்திலும், காந்திக்கு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைப் பொறுத்த வரை, அரச குடும்பத்தினர் தவிர்த்து தனிநபருக்காக தபால்தலை வெளியிடப்பட்டது மகாத்மாவுக்கு மட்டும்தான் என்பது அவரது சிறப்பையும், மதிப்பையும் எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
அலகாபாத்தைச் சேர்ந்த அனில் ரஸ்தோகி என்பவர் உலகம் முழுவதும் உள்ள சிறப்புவாய்ந்த தபால்தலைகளை சேகரித்து வருகிறார். இவரிடம் 150 நாடுகளைச் சேர்ந்த 800 காந்தி படம் பொறித்த தபால்தலைகள் உள்ளன. காந்தியின் பெருமையை உலகிற்கு உணர்த்தவே இதுபோன்ற சேகரிப்பில் தாம் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவரது சேகரிப்பின் மூலம் ஈரான், ரோம், சிரியா, மொராகோ, அமெரிக்கா, உகாண்டா, மொரீஸியஸ் உள்ளிட்ட 150 நாடுகளில் காந்தியின் படம் பொறித்த தபால்தலைகள் வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, காந்தியின் நினைவக பல்வேறு நாடுகளால் வெளியிடப்பட்ட தபால் உறைகள், டோக்கன்கள், நாணயங்கள், தபால் அட்டைகள், லேபிள்கள் உள்ளிட்டவற்றையும் சேகரித்துள்ள ரஸ்தோகி, தனது 15வது வயதில் இருந்து சேகரிப்பைத் துவக்கியவர்.