அரசிற்கும் படையினருக்கும் வித்தியாசமில்லை: ஏ.கே.அந்தோணி!
புதன், 1 அக்டோபர் 2008 (16:36 IST)
ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையில் அரசிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.
மத்திய அரசின் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு திருத்தங்களுடன் செப்டம்பர் 1 இல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் பாதுகாப்புப் படையினருக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில், சுமார் 1.5 மில்லியன் எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படையினரை பொறுமை காக்குமாறு வலியுறுத்தி பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியிருப்பதாவது:
பாதுகாப்புப் படையினரும் அரசின் ஒரு அங்கம் என்பதால் அரசிற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. பாதுகாப்புப் படையினர் தங்கள் குறைகளைக் கூறத் தயங்கத் தேவையில்லை.
திருத்தங்களுக்குப் பிறகுதான் ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரவை முடிவு எடுத்தது. இதனால் அரசிற்க்கு கூடுதலாக ரூ.6,000 கோடி செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரையின் முடிவிற்குப் பிறகு பாதுகாப்புப் படைத் தளபதி சில பிரச்சனைகளையும், தயக்கங்களையும் தெரிவித்தார். இது இயற்கையானது என்றாலும், அவை பற்றி அரசு உரிய முறையில் விவாதித்து வருகிறது.
இதற்கிடையில் பாதுகாப்புப் படையினர் சிறிது அதிகப்படியாக நடந்துகொள்வது சரியல்ல.
மேலும், இந்தச் சிக்கலை கவனிக்க மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் குழு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை.
இவ்வாறு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.