குடியரசுத் தலைவர் வாகன அணி வகுப்பில் குண்டு வெடிப்பு: 4 காவலர்கள் பலி!
திங்கள், 29 செப்டம்பர் 2008 (18:19 IST)
சத்தீஷ்கர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரது வாகன அணி வகுப்பின் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் அதிகாரி ஒருவர் உள்பட மத்திய ரிசர்வ் காவல் படையினர் 4 பேர் கொல்லப்பட்டனர்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரக்கூட் பகுதியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
இங்குள்ள காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள் உடன்வர குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாகன அணிவகுப்பைக் குறிவைத்து நக்சலைட்டுகள் கண்ணி வெடிகளை புதைத்திருந்தனர். இதில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் ஜீப் சிக்கியது.
பாஸ்தார் மாவட்டத்தில் இந்திராவதி ஆற்றில் உள்ள புகழ்பெற்ற சித்திரகூட் நீர்வீழ்ச்சியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி திவாகர் மஹபத்ரா, ஜீப் ஓட்டுநர் எல்.கே.கோரா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், தலைமைக் காவலர் எஸ்.பி.வர்மா, காவலர் என்.கே.ஜா ஆகியோர் அரசு மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர்.
படுகாயமடைந்த காவலர் ஆர்.பர்மி, தலைமைக் காவலர் ரவீந்திர நாயுடு, சிறப்புக் காவல்துறை அதிகாரி சனிராம் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலால் குடியரசுத் தலைவரின் வாகன அணிவகுப்பு தடைபடவில்லை என்றும், தாக்குதல் நடந்துள்ள பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.