புதுடெல்லி வந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அனடோலி செர்டியூகோவ் இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனியைச் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளின் அமைச்சர்களும் விவாதித்ததாக புதுடெல்லியில் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு நாட்டு அரசுகளுக்கும் இடையேயான ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் கூட்டத்திற்கு ஏ.கே. ஆண்டனியும், அனடோலியும் கூட்டாக தலைமை வகிக்கிறார்கள்.
இந்திய பாதுகாப்புத் துறைக்கு ரஷ்யாவில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது, மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
5ம் தலைமுறை போர் விமானங்களை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிப்பது, டி-90 டாங்கிகள் தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்தல் போன்றவை பற்றியும் பேசப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவிடமான அமர் ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து ரஷ்ய அமைச்சர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் இந்திய பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
3 நாட்கள் இந்திய சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டிருந்த அனடோலி, தமது செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு, இன்றே ரஷ்யா திரும்புவதாகவும், அதற்கான காரணம் பற்றித் தெரியவில்லை என்றும் அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய அமைச்சருடன் அந்நாட்டு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் இந்தியாந் வந்துள்ளது.