முக்கிய துறைமுக பொறுப்புக் கழகங்கள், கப்பல் தள தொழிலாளர்கள் வாரியங்களின் பணியாளர்களுக்கு 2007-08ஆம் ஆண்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்க மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதி அளித்துள்ளார்.
சராசரியாக கப்பல்கள் வரும் நேரம், சராசரியாக கப்பல் தளத்தின் ஒரு நாள் பணி, கையாளும் கட்டணம் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் கணக்கிடப்பட்டு இந்த ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
2007-08ஆம் ஆண்டுக்கான வருடாந்திர ஊதியத்தில் 19.96 விழுக்காடு ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். இதனால் சுமார் 66,000 துறைமுக மற்றும் கப்பல் தள தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பெறுவர்.
ஒவ்வொரு தொழிலாளரின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, ஊக்கத் தொகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை கணக்கிடப்படவுள்ளது.
இதனால் ஒவ்வொரு பணியாளரும் அதிகபட்சமாக ரூ.5,988 பெறவுள்ளார்கள். இதற்கு சுமார் ரூ.39.52 கோடி செலவாகும் என்று அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.