இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைத் தடை செய்ய நடவடிக்கை!
வெள்ளி, 26 செப்டம்பர் 2008 (17:49 IST)
நமது நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளுக்குக் காரணமாகக் கருதப்படும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தலைநகர் டெல்லி, வாரணாசி, பைசாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், குண்டு வெடிப்புகள் தொடர்பாக அந்தந்த மாநில அரசுகள் நடத்திவரும் விசாரணையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பற்றிய தகவல்கள் தெரியவந்தால் அவற்றைப் பகிர்ந்துகொள்ளுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (சிமி) ஒரு பிரிவுதான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு என்று கருதப்படுவதால், அந்த அமைப்பைத் தடை செய்வதற்கு முன்பு அது பற்றிய முழுமையான தகவல்களைச் சேகரிப்பது முக்கியமானது என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.