கர்நாடகா: தேவாலயங்கள் பாதுகாப்பு-மத்திய குழு ஆய்வு!
செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (17:54 IST)
கர்நாடகாவில் தேவாலயங்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதால், அவற்றின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்த குழு, கர்நாடகாவில் இன்று ஆய்வு நடத்தியது.
உள்துறை பாதுகாப்பு பிரிவின் சிறப்பு செயலர் எம்.எல்.குமவத் தலைமையிலான மத்திய குழு, தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அம்மாநில காவல்துறை அதிகாரிகளிடம் தகவல்களை திரட்டியது. ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, மத்திய குழு பதிலளிக்க மறுத்துவிட்டது.
கடந்த 14ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான குலசேகரா தேவாலயம், மிலக்ரிஸ் தேவாலயம் ஆகியவற்றை உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் ஏ.கே.யாதவ் அடங்கிய மத்திய குழு இன்று பார்வையிட்டது. மேலும் பதட்டமான பகுதிகளில் உள்ள தேவாலயங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும் அவர்கள் ஆய்வு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஹுப்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, கர்நாடகாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஸ்திரமாக உள்ளதாக தெரிவித்தார்.
இங்கு (கர்நாடகா) பாதுகாப்பை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பு அரசு, தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி மக்களை பலிகொண்ட டெல்லியில் ஏன் இதுபோன்று பாதுகாப்பு சோதனை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
காஷ்மீர், டெல்லியில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான இந்து மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதால் தெருக்களில் அலைவதாக குறிப்பிட்ட எடியூரப்பா, அவர்களின் நலனுக்காக மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேட்டுள்ளார்.