தீவிரவாதி அதீஃப் கிராமத்தில் காவல்துறை சோதனை!

செவ்வாய், 23 செப்டம்பர் 2008 (17:23 IST)
டெல்லி தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான அதீஃப்பின் சொந்த கிராமத்தில் டெல்லி காவல்துறையினரும், உத்தரபிரதேச தீவிரவாத எதிர்ப்பு படையினரும் கூட்டாக சோதனை நடத்தினர்.

உத்தரபிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் உள்ள சஞ்சர்பூர் கிராமத்திற்கு இன்று காலை சென்ற காவல்துறையினர், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கிராமத்தை முற்றுகையிட்டு ஒவ்வொரு வீடாக சோதனை நடத்திய காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய 2 மரு‌த்துவ‌ர் உட்பட 6 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், டெல்லி காவல்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்திய என்கவுண்ட்டரில் பலியான அதீஃப்புக்கு, அம்மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு இருந்ததும், கடந்த 6 மாத காலத்தில் அவர் கணக்கில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் அனைவரும் சஞ்சர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் சோதனை முடிவடையும் வரை கிராமத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்