கருணாநிதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அக்.17 தீர்ப்பு!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (20:26 IST)
சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தில் நடந்த முழு அடைப்பு, நீதிமன்ற உத்தரவை மீறிய நடவடிக்கையாகும், என்றே எனவே அவர் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளார் என்றும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீ்ர்ப்பளிக்கிறது.

சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற இருந்த முழு அடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மறுநாள் நடந்த முழு அடைப்பு அரசின் ஆதரவுடன் முழுமையாக நடந்ததாகவும், இது நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய நடவடிக்கை என்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை தமிழக முதலமைச்சர் கருணாநிதி, தலைமைச் செயலர் திரிபாதி, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் மீறியது நீதிமன்ற அவமதிப்பு என்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சாங்வி ஆகியோர் கொண்ட நீதிமன்றம் விசாரித்தது.

தாங்கள் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படவில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, தமிழக அரசு தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குனர் உட்பட 6 பேர் ஆகியோர் சார்பாக நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது இன்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பு அக்டோபர் 17ஆம் தேதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்