டெல்லி தொடர் குண்டு வெடிப்பில் லஷ்கர் இ- தயீபாவிற்குத் தொடர்பு!
சனி, 20 செப்டம்பர் 2008 (20:04 IST)
தலைநகர் டெல்லியில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன், இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ- தயீபா இயக்கம் நடத்தியிருக்கலாம் என்று டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு டெல்லியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் நேற்று காவலர்களுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி அடிஃப்-பிற்கு சர்வதேசப் பயங்கரவாத இயக்கமான அல்- காய்டா இயக்கத்தின் மீது ஈர்ப்பு இருந்துள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியப் பயங்கரவாதியான அடிஃப்தான் நமது நாட்டில் நடந்துள்ள பல்வேறு குண்டு வெடிப்புகளுக்குத் திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளான் என்றும், அல்- காய்டா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனைப் பின்பற்றி அவன் பயங்கரவாதியாக மாறியிருக்கலாம் என்றும் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவின் இணை ஆணையர் கர்னல் சிங் தெரிவித்தார்.
சிமி இயக்கத்திற்கும் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்திற்கும் தேவையான முழுமையான ஒத்துழைப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ- தயீபா இயக்கம் வழங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அல்- காய்டா, ஒசாமா பின்லேடன் தொடர்பான தகவல்கள் அடங்கிய, பயங்கரவாதி அடிஃப்-இன் லேப்டாப்பை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அடிஃப்-பிற்கு அல்- காய்டா இயக்கத்துடன் தொடர்புள்ளதா என்று கேட்டதற்கு, தற்போதைய நிலையில் அதுபற்றி எதுவும் கூற முடியாது என்றார் கர்னல் சிங்.
ஜெய்ப்பூர், வாரணாசி குண்டு வெடிப்பில் தொடர்பு!
வடக்கு டெல்லியில் ஜாமியா நகரில் நடந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டுக் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி சைஃப், நேற்றிரவு உள்ளூர் தொலைக்காட்சி அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஜீஸான் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நீதிமன்றம் அருகில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு புலனாயுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தின் முக்கிய வெடிகுண்டு தயாரிப்பாளராக கருதப்படும் சஜ்ஜாத் என்பவனுடன் சேர்ந்து வாரணாசி நீதிமன்ற வளாகத்தில் சைஃப்தான் குண்டுகளை வைத்துள்ளான் என்றார் இணை ஆணையர் கர்னல் சிங்.
மேலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அடிஃப் மூளையாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகவும், விசாரணையின் இறுதியில்தான் அதுபற்றிக் கூற முடியும் என்றும் கர்னல் சிங் கூறினார்.
இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வெடி பொருட்கள் கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.