டெல்லி குண்டு வெடிப்பில் தொடர்பு: கைதான பயங்கரவாதிகள் ஒப்புதல்!
சனி, 20 செப்டம்பர் 2008 (15:44 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தங்களுக்குத் தொடர்பு உள்ளது என்று, டெல்லியில் நேற்று நடந்த மோதலின்போது கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 2 பேர் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் முகமது சயீஃப் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். மற்றொரு பயங்கரவாதியான ஜீஸான் நேற்றிரவு உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றின் அலுவலக வளாகத்தில் கைது செய்யப்பட்டான்.
முகமது சயீஃப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கனாட் பிளேஸ் பகுதியில் ரீகல் திரையரங்கம் அருகில் குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டார் என்றும், அந்த குண்டை வெடிப்பதற்கு முன்பே கைப்பற்றிவிட்டோம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிரேட்டர் கைலாஸ் சந்தைப் பகுதியில் குண்டு வைத்தவர், நேற்றைய மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி அதீஃப்தான் என்றும், அவர் டெல்லி தொடர் குண்டு வெடிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர் என்றும் சயீஃப் கூறியுள்ளார்.
மேலும் காவலர்கள் தேடி வரும் 10 பயங்கரவாதிகளையும் கடந்த ஜூலை 27 ஆம் தேதி அதீஃப்தான் டெல்லிக்கு அழைத்து வந்தார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதீஃப், ஜீஸான் ஆகியோரிடம் தொடர்ந்து நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.