கையெழுத்திடும் நிலையில் இந்தியா-பிரான்ஸ் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
சனி, 20 செப்டம்பர் 2008 (13:06 IST)
அமெரிக்காவிடன் செய்துகொண்டது போல பிரான்ஸூடனும் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியா செய்துகொள்ளவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இரு தலைவர்களின் கையெழுத்திற்காக காத்திருக்கிறது.
இத்தகவலை டெல்லியி்ல் நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் ஜெரோம் போனஃபாண்ட், பிரான்ஸ் அதிபர் நிக்கோலாஸ் சர்கோஜி கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோதே இந்த இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் புஷ்-ஷை சந்தித்துப் பேசிய பிறகு இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தத்தில் (அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில்) கையெழுத்திடுவார்கள்.
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரான்ஸ் வரும் பிரதமர் மன்மோகன், அதிபர் சர்கோஜியை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது இந்தியா-பிரான்ஸ் அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என்று கூறிய பிரான்ஸ் தூதர் ஜெரோம், ஆனால் அதனை முடிவு செய்யவேண்டியது இரு தலைவர்களும்தான் என்று கூறியுள்ளார்.
இந்தியாவோடு அணு சக்தி ஒத்துழைப்பை மேற்கொள்வது என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரான்ஸ் முடிவு செய்தது என்றும், அணு சக்தி மற்றும் அணு ஆயுதப் பிரச்சனைகளை ஒரு புதிய கோணத்தில் அணுகுவது என்று இருநாடுகளும் முடிவு செய்ததாகவும் தெரிவித்த தூதர் ஜெரோம், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிற்கு (என்.எஸ்.ஜி.) இந்தியா அளித்த உறுதிமொழிகளின் அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.