வன்முறையை கட்டுப்படுத்துங்கள்-கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிர்பந்தம்!

சனி, 20 செப்டம்பர் 2008 (09:33 IST)
கிறித்தவர்கள் மீதும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதும் நடந்துவரும் வன்முறையை கட்டுப்படுத்துமாறு கர்நாடக அரசிற்கு மத்திய அரசு ஆலோசனை-உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கிறித்தவர்கள் மீதும், அவர்களின் தேவாலயங்கள் மீதும் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய உள்துறைச் செயலர் மதுகர் குப்தா, ‌கி‌றித்தவர்கள் மீது நடைபெற்றுவரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறும், வன்முறையை தடுத்து நிறுத்த மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்புமாறும் ஆலோசனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 355ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் வினவியதற்கு பதிலளிக்க மதுகர் குப்தா மறுத்துவிட்டார்.

பிரிவு 355ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவு, மாநில அரசிற்கு மத்திய அரசு விடுக்கும் எச்சரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த எச்சரிக்கைக்குப் பின்னரும் நிலைமை சீரடையவில்லையெனில், பிரிவு 356ஐ பிறப்பித்து மாநில அரசை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பெங்களூருவில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆசார்யா, சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்