யுரேனியம் கண்டறிவதில் நுழைகிறது ஓ.என்.ஜி.சி.!
புதன், 17 செப்டம்பர் 2008 (14:16 IST)
மத்திய அரசின் யுரேனியம் கார்பரேசன் ஆஃப் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து யுரேனியம் கண்டறியும் பணியில் ஒரு மாத காலத்திற்குள் ஈடுபட உள்ளதாக நமது நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அறிவித்துள்ளது.
"நமது நாட்டில் யுரேனியப் படிவுகள் உள்ள இடங்களைக் கண்டறியும் பணியில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் ஒரு மாத காலத்திற்கும் நாங்கள் கையெழுத்திடவுள்ளோம்" என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ். சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்திற்கான பரிந்துரைக்கு ஓ.என்.ஜி.சி., யுரேனியம் கார்பரேசன் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளும் ஒப்புதல் வழங்கிவிட்டன.
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், யுரேனிய வர்த்தகத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றார் சர்மா.
உலகில் உள்ள யுரேனியம் படிவுகளில் 0.8 விழுக்காட்டைத் தன்னகத்தே வைத்துள்ள இந்தியா, 2020இல் அணு சக்தி மூலம் 20,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பூர்த்தி செய்ய 78,000 டன் யுரேனியம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.