காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!

சனி, 13 செப்டம்பர் 2008 (14:09 IST)
மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று காலை புதுடெல்லியில் தொடங்கியது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், செயலர்கள், நிர்வாகிகள் உள்பட சுமார் 150 இதில் பங்கேற்றுள்ளனர்.

விரைவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு- காஷ்மீர், டெல்லி, சட்டீஷ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், எந்த நேரத்திலும் மக்களவை தேர்தல் வரலாம் என்பதால் அதுபற்றியும், இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

தேர்தல் கூட்டணி, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களை முறையடிக்கும் வியூகம் உள்ளிட்டவை அப்போது ஆராயப்படுகிறது.

அணுசக்தி ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற பாடுபட்டு வரும் பிரதமர் மன்மோகன்சிங்கை பாராட்டியும் இதில் தீர்மாணம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அசாம், பீகார், ஒரிசா மாநிலங்களில் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்