அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி!

சனி, 13 செப்டம்பர் 2008 (13:44 IST)
சூப்பர்சானிக் வேகத்தில் வரும் விமானங்களையும், அதிவேக விண் இலக்குகளையும் தாக்கி அழிக்கவல்ல அஸ்த்ரா ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதித்துள்ளது.

போர் விமானங்களில் பொருத்திச் சென்று கண்ணிற்கு புலப்படாத தூரத்தில் மின்னல் வேகத்தில் வரும் விமானங்களையும், ஏவுகணைகளையும் தாக்கி அழிக்கவல்ல இந்த ஏவுகணை, ஒரிசா மாநிலம் பாலாசூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இன்று மதியம் 12.05 மணிக்கு ஏவப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த சோதனையைத் தொடர்ந்து மேலும் ஒரு சோதனை அடுத்த சில நாட்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திட எரிபொருளுடன் இயங்கக்கூடிய அஸ்த்ரா ஏவுகணை, 1.2 முதல் 1.4 மாக் வேகத்தில் வரும் இலக்குகளை (விமானம் மற்றும் ஏவுகணைகள்) துல்லியமாக இடைமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என்றும், உலக அளவில் தற்பொழுது பயன்பாட்டில் உள்ள விண்ணிலிருந்து விண் இலக்குகளை தாக்கும் ஏவுகணை வகைகளில் இது அது நுட்பமானது என்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்