நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் : குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிகள் கோரிக்கை!
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (16:33 IST)
புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் பற்றிய உண்மைகளை மக்களிடம் இருந்து மத்திய அரசு மறைத்துவிட்டது என்று குற்றம்சாற்றியுள்ள இடதுசாரிக் கட்சிகள், இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்து, அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வார்ட் பிளாக், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்துத் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையைக் கொடுத்தனர்.
பின்னர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், "சிறுபான்மை நிலையை அடைந்துவிட்ட மத்திய அரசு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரைத் தள்ளி வைத்துள்ளதன் மூலம், தனக்குப் பெரும்பான்மை இருப்பதைப்போல நடித்துக்கொண்டிருக்கிறது." என்று குற்றம்சாற்றினர்.
"அணு சக்தி ஒப்பந்தம், ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. மத்திய அரசின் பதிலிற்காகச் சாதாரண மக்கள் காத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அரசு நாடாளுமன்றத்தின் ஒரு அமர்வையே ரத்து செய்துள்ளது. சுதந்திர இந்தியாவில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறனார்.
"அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்துள்ள முக்கிய உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன. நமது நாட்டின் இறையாண்மை, தேசப் பாதுகாப்பு, சுதந்திரமான அயலுறவுக் கொள்கை ஆகியவை குறித்து அவர் அளித்த உறுதிமொழிகள் சந்தேகத்திற்கு உரியதாகியுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றம் வாயிலாகப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து பதிலைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமையாகும்" என்றும் யச்சூரி கூறினார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மிஸ்ரா பேசுகையில், சிறுபான்மை நிலையை அடைந்துவிட்ட மத்திய அரசு மக்களைச் சந்திக்க வெட்கப்படுகிறது. அதனால்தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.