நாளை புகையிலை கட்டுப்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு: அன்புமணி துவக்கி வைக்கிறார்!
திங்கள், 8 செப்டம்பர் 2008 (18:27 IST)
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் இது தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆராய்வதற்காக தேசிய ஆலோசனை கருத்தரங்கு நாளை புது டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் அன்புமணி துவக்கி வைக்கிறார்.
புகையிலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தற்போதைய சட்டங்களைப் பற்றியும், இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2003-ஐ சிறப்பாக அமல்படுத்துவது பற்றியும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் ஆலோசிக்கப்படுகிறது.
அரசு உயரதிகாரிகள், செய்தியாளர்கள், சுகாதாரத் துறை வல்லுனர்கள் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகள் இந்த கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபாக லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.