ரயில், ரயில் நிலையங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள், திருட்டு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க மத்திய உளவு அமைப்புகளைப் பயன்படுத்த ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.
ரயில் பயணிகளுக்கும், ரயில்வே பொருள்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்வதற்கான ஆய்வுக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரயில், ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுப்பது, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களை முறியடிப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மாநில உளவுத்துறை காவலர்களின் ஒத்துழைப்புடன், மத்திய உளவு அமைப்புகள், மாநில காவலர்கள், ரயில்வே காவல் படை ஆகியவற்றையும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனடிப்படையில் மாநில காவலர்கள், ரயில்வே காவலர்கள், உளவுத் துறையினர் ஆகியோர் ஒருங்கிணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் புதிய உத்தியைக் கையாள ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்கமாக பாதுகாப்புப் பணிகளில் மத்திய உளவு அமைப்புகளை ஈடுபடுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
மேலும், பாதுகாப்பு தொடர்புடைய கருவிகளை இயக்குவது அதாவது கண்காணிப்பு கேமரா, வாகனங்களைச் சோதனையிடுவது, உடைமைகளைச் சோதனையிடுவது, வாயிற் சோதனை, வெடிப்பொருள் சோதனை, குறிப்பிட்ட காலத்துக்கு விளம்பர உரிமை உள்ளிட்டவைகளை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.