நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்: எதிர்க் கட்சிகள் கோரிக்கை!
சனி, 6 செப்டம்பர் 2008 (18:41 IST)
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம், ஜம்மு- காஷ்மீர் கலவரம், ஒரிசா கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்தப் போவதாக இடதுசாரிகள், தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்தினால் அணு சக்தி ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், "அமெரிக்காவின் நிபந்தனை தற்போது அம்பலமாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் உண்மையை மறைத்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங் பதவிவிலக வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்ய மாட்டார். இந்த அரசு வெட்கங்கெட்டது" என்றார்.
"நாடாளுமன்றத்தைச் சந்திக்க இந்த அரசு பயப்படுகிறது. ஸ்ரீ அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரம் தொடர்பாக ஜம்மு- காஷ்மீரில் கலவரம் வெடித்தபோது, நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதித்திருக்க வேண்டும். ஒரிசாவில் கலவரம் வெடித்துள்ளது பற்றியும் அனைத்துக் கட்சிகளின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும்" என்றார் காரத்.
"வழக்கமாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை ஆகஸ்ட் மாதமே துவங்கியிருக்க வேண்டும். ஆனால் பிரச்சனைகளுக்கு பயந்து அக்டோபர் 17 ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று வருகிற 9 ஆம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். எங்களுடன் பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் கட்சிகளின் பிரதிநிதிகளும் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ளனர்." என்று காரத் தெரிவித்தார்.