பீகாரில் மேலும் 9 லட்சம் பேர் இடம்பெயர்வு!
சனி, 6 செப்டம்பர் 2008 (18:40 IST)
மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பீகாரில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோசி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் பல்வேறு புதிய பகுதிகளில் புகுந்துள்ளதன் காரணமாக மேலும் ஒன்பது லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்துள்ளனர்.
பீகாரில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த மழை ஓய்ந்து, அதனால் ஏற்பட்ட வெள்ளம் தற்போது வடியத் துவங்கியுள்ளதால் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீடுகள், சொத்துக்களை இழந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் மக்களுக்காக பெரிய அளவிலான தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
முக்கிய ஆறான கோசி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அரேரியா, புர்ணியா, சுபால், மாதேபுரா, கடிஹார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் ஏற்கெனவே தற்காலிகத் தங்குமிடங்களில் உள்ள நிலையில், தற்போது மேலும் 9 லட்சம் பேர் தற்காலிகத் தங்குமிடங்களுக்காகக் காத்திருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள எல்லாப் பகுதிகளுக்கும் மருந்துகளும், உணவுப் பொருட்களும் போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், மாநில அரசின் எல்லா துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் ரூ.1,600 கோடி நிதி பீகார் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம், 2,000 கி.மீ. நீளமுள்ள கிராமப்புறச் சாலைகளைப் புதுப்பித்தல், புதிதாக 58,000 வீடுகளைக் கட்டுதல், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கொடுப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் பீகார் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.