21ஆ‌ம் நூற்றாண்டுக்கான இந்தியா வகுப்பறைகளிலேயே உருவாக்கப்படும்: ‌பிரதம‌ர்!

"21ஆ‌ம் நூற்றாண்டுக்கான இந்தியா நமது கல்விக் கூடங்களின் வகுப்பறைகளிலேயே உருவாக்கப்படும். இக்கூடங்கள் இந்தியாவையும் உலகத்தையும் மாற்றியமைக்கும்" எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னைப் பல்கலைக்கழக 150-வது ஆண்டு நிறைவு விழாவிலபிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌, கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி, த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ஆ‌கியோரு‌க்கு கவுரவ முனைவ‌ர் ப‌ட்ட‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

பி‌ன்ன‌ர் இ‌வ்‌விழா‌வி‌ல் உரையா‌ற்‌றி‌ய ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், "சென்னை பல்கலைக்கழகம் தனித்தன்மை வாய்ந்த ஒரு பெருமைமிகு நிறுவனம். நமது நாட்டின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்ற ஏழு பேர்களை உருவாக்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்திற்கு உண்டு. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் மற்றும் சுப்பரமணியன் சந்திரசேகர் ஆகியோரை நாட்டுக்கு அளித்ததும் இந்த பல்கலைக்கழகமே. சென்னையைச் சேர்ந்த எஸ்.ஆர். ஸ்ரீனிவாச வரதன் ஏபெல் பரிசு (Abel Prize) பெற்றவர்.

அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லும் இந்தியாவை உருவாக்குவதே நமது குறிக்கோளாகும். அத்துடன் இளைஞர்கள் தொழில் ரீதியாக நன்கு பயிற்சி பெறுவதற்கும் அனைத்து குழந்தைகளும் அறிவுசார் துறைகளில் வளர்ச்சி அடைவதற்கும் ஏற்ற இந்தியாவை உருவாக்குவதும் நமது இலக்காகும்.

கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தலில் தமிழ்நாடு முன்உதாரணமாகத் திகழ்கிறது. இந்தியாவின் இதர மாநிலங்களும் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பெண் கல்வி அறிவு மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் ஆகிய துறைகளில் தமிழ்நாட்டின் முன்னேற்றம் பிரமிக்கும் வகையில் உள்ளது. தமிழக முதலமைச்சர் கருணாநிதி‌யி‌ன் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், இந்த மாநிலம் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் மேலும் உயர்ந்த நிலையை அடையும் என்று நான் நம்புகிறேன்.

தகுதி வாய்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிட்டும் வகையில் செ‌ய்‌திட வேண்டும். சமுதாயத்தில் இதுவரை புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் நமது பொருளாதார முன்னேற்றத் திட்டங்களில் துடிப்புடன் பங்கு பெறாவிட்டால் வளர்ச்சியின் முழுப் பயனையும் நாம் அடைய இயலாது.

இந்த இலக்கை அடைவதில் கல்வி துணைபுரிய வேண்டும். ஜனநாயக ரீதியில் அனைவருக்கும் கல்வி அளிப்பதும், உயர்ந்த தரத்தை பேணி வளர்ப்பதும் ஒன்றுடன் ஒன்று இணைந்த இலக்குகளாக இருக்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் உயர்ந்த திறனை கொண்டதாகவும் புதுயுக இந்தியா திகழ வேண்டும்.

மாணவர்களே உங்களது எதிர்கால நன்முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்கான சக்தி உங்களிடம் உள்ளது.

அப்போதுதான் உலகச் சூழலில் இந்தியா ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியும். நம் நாடு எதிர்கொள்ளும் சமுதாயச் சவால்கள் உங்கள் ஒவ்வொருவரின் சிந்தனையைத் தூண்டி சவால்கள் குறித்து வினவச் செய்ய வேண்டும். உங்கள் மனதை ஆட்கொண்டுள்ள வினாக்களுக்கு விடை காணச் செய்ய வேண்டும். அனைத்துக்கும் மேலாக மேம்பட்ட திறனை அடைய நீங்கள் முயல வேண்டும். ஏனெனில், 21ஆ‌ம் நூற்றாண்டுக்கான இந்தியா உங்களின் படைப்புத் திறனையே சார்ந்துள்ளது.

21ஆ‌ம் நூற்றாண்டுக்கான இந்தியா நமது கல்விக் கூடங்களின் வகுப்பறைகளிலேயே உருவாக்கப்படும். இக்கூடங்கள் இந்தியாவையும் உலகத்தையும் மாற்றியமைக்கும். நீங்கள் செல்லும் பாதை வாழ்த்தப்படட்டும்" எ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்