பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுவதால் அசாமில் 12 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஸிரங்கா தேசிய பூங்காவில் நீர் புகுந்ததைத் தொடர்ந்து அங்குள்ள வன விலங்குகள் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சுற்றித் திரிவதாகவும், இதில் கடந்த 2 நாட்களில் மட்டும் நான்கு விலங்குகள் வாகனங்களில் சிக்கி இறந்துள்ளதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு காண்டாமிருகம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாமில், 12 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஜூன் 1ஆம் தேதிக்கு பின்னர் வெள்ளத்தால் அசாம் பாதிக்கப்படுவது இது 3வது முறையாகும். இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், மத்திய மற்றும் கீழ் அசாமில் பகுதிகளில் வெள்ளம் ஓரளவு வடிந்துள்ளதாலும், மேல் அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப் பெருக்கு கட்டுக்குள் வந்துள்ளதாலும் இன்னும் ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அம்மாநில அரசு சார்பில் ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.