558 வீடுகள், 17 தேவாலயங்கள் தீக்கிரை: ஒரிசா அரசு!
திங்கள், 1 செப்டம்பர் 2008 (21:09 IST)
ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் 558 வீடுகள், 17 தேவாலயங்கள், வழிபாட்டுக் கூடங்கள் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒரிசாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி விஷ்வ இந்து பரிஷத் தலைவர் லக்ஷ்மானந்த சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கந்தமால் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு இன்று மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.
கலவரத்தில் இதுவரை 558 வீடுகளும் 17க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுக் கூடங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. கந்தமால் மாவட்டத்தில் 543 வீடுகளும், கஜபதி மாவட்டத்தில் 15 வீடுகளும் கொளுத்தப்பட்டுள்ளன.
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் அஜித் குமார் திரிபாதி இத்தகவலைத் தெரிவித்தார். கலவரத்தில் மொத்தம் எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.
கந்தமால் மாவட்டக் கலவரங்கள் தொடர்பாக இதுவரை 185க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவுமம், வழிபாட்டுத் தலங்களைத் தாக்கிய குற்றத்தின் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திரிபாதி தெரிவித்தார்.
இதுதவிர கலவரத்தில் பாதிக்கப்பட்ட 12,539 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான மறுவாழ்வு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.