ஜம்முவில் கொண்டாட்டம்: காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு- பதற்றம்!
திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:01 IST)
அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதியுடன் ஏற்பட்டுள்ள உடன்பாட்டினால் ஜம்முவில் இயல்பு நிலை திரும்பினாலும், பிரிவினைவாதிகளின் போராட்டம் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 9 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதனால் பதற்றம் நிலவுகிறது.
அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா அமைத்த குழுவிற்கும், ஸ்ரீ அமர்நாத் யாத்ர சங்கார்ஷ் சமிதிக்கும் இடையில் நடந்த 4ஆவது சுற்றுப் பேச்சில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த 64 நாட்களாக ஜம்முவில் நடந்து வந்த போராட்டங்கள் முடிவிற்கு வந்துள்ளன.
இதையடுத்து ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர், கிஸ்த்வார், தோடா, சம்பா உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும்இ மேளங்களை இசைத்து நடனமாடியும் மக்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இயல்பு நிலை திரும்பியதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. இருந்தாலும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பூஞ்ச் உள்ளிட்ட சில எல்லையோர மாவட்டங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு விலக்கப்படவில்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
காஷ்மீரில் ஊரடங்கு நீடிப்பு- பதற்றம்!
அமர்நாத் நில மாற்ற விவகாரத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக பிரிவினைவாதிகள் அறிவித்துள்ள காரணத்தால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா, பந்திபோரா பகுதிகளைத் தவிர மற்ற 9 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளில்கூட இன்று சிறிதும் தளர்வின்றி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீநகர், பாரமுல்லா, குப்வாரா ஆகிய பகுதிகளில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 9 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து, இன்று ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நிலைமை சீரடைவதை முன்னிட்டு ஊரடங்கை விலக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.